Friday 9 May 2014

தேன்சுமந்த தென்றல்.

அம்மாவைக் காண…………தென்றல்.

தென் திசை தென்றல் எங்கே
தேன் சுமந்து சீதனமோ!
தமிழன்னை காண நீயும்
தனியாகப் பயணமோ!.
வட திசை நோக்கித்தான்
வரிசை கொண்டு  போகிறாயோ!!
பொதிகை மலை புறப்பட்டு.
போகும் வழி தூரமோ!

அம்மாவைக் காண நீயும்
அவசரப் பயணமோ!
சும்மா நீ செல்வாயோ
சுகந்தம் கொண்டு விரைகிறாயோ!
எம்முயிர் அம்மாவை
எங்கு நீ தேடுவாயோ!
எம்முள் இதயத்தில்தான்
இதோ பார் அறிவாயோ!

இம்மாநிலச் சொந்தமோ!
இனிதமிழ் பந்தமோ!
செம்மா பலா வாழை
சீர் கொண்டு செல்கிறாயோ!
அயராது பணியாற்றி
அதிலே ஒரு சுகமேற்றி
வாழ்வென்றால் சேவையென்று
வாழும் தாயைக் காண்பாயோ!

அம்மாவைக் களைப்பாற்ற
அன்புடன் தேடுவாயோ!
எம்மை நீ தழுவினாலே
எங்களம்மா சுகம் கொள்வாள்.
தாமிரவரணி ஆற்றில்
தலை மூழ்கிக் குளித்துமே
தேமதுர தமிழ் அணங்கை
தெய்வமெனத் தொழுவாயோ! !

குற்றாலச் சாரலிலே
குளிர்ந்து நீயும் சுகமாக
அருவியெலாம் நீராடி
அம்மாவைப் பணிவாயோ!
நெல்வயல் நீண்டவழி
நெடும் பயணம் கடந்துமே
செல்வனவன் செந்தூரான்
சேவடிகள் தரிசனமோ!

அலைவாயில் கடலாடி
ஆண்டவனை கலந்தாடி
அங்கிருந்தே குமரியவள்
தங்கவொளி சேவிப்போ!
உவரி வந்து மாதாவை
உளங்கனிந்து செபித்துமே
காயல் பட்டண தர்காவிலே
காலாற்றி தொழுகையோ!

வெற்றிலைத்தோட்டங்களை
சுற்றியும் சுவை மணந்து
வெற்றிக் கனிகள் பறித்துமே
வீரத்தாய் காணிக்கையோ!
ஆழக்கடல் தூத்துக்குடி
ஆழத்தில் முத்தெடுத்து
ஈழத்தமிழ் பரணிபாடி
எந்தாய்க்கு சூட்டுவியோ!

வாழுந்தமிழ் சிதம்ரனார்
விட்ட கப்பல் தடம் பார்த்து
கீழக்கரை மீனவரை
கண்டு காயம் ஆற்றுவியோ!
பாஞ்சாலம் ஓட்டப்பிடாரம்
பக்கமே எட்டையபுரம்
மணியாச்சி கட்டலாங்குளம்
வணங்கியும் வாழ்த்துவியோ!

கர்மவீர்ர் காமராசர்
தர்ம  ஊர் விருதுநகர்.
பரம ஏழை பாதம் தொட்ட
பழைய மண் பூசுவாயோ!
பக்கம்தான் மதுரையும்
பழம் தமிழ் சங்கத்தூர்.
திக்கெல்லாம் கோபுரங்கள்
தேவிமீனாள் தர்சிப்பியோ!

ராமநாதன் பூமிகண்டு
சேமநாடு சேதுபந்தம்
தஞ்சை மண்ணும் தாண்டியும்
தமிழருமை கண்டாயோ!
காவிரியில் தாகமாற்றி
கல்லணை கவியேற்றி
பாவிரி களஞ்சியங்கள்
பார்வையிட்டும் மகிழ்ந்தாயோ!

திருவரங்கம் கண்டாயோ!
பெருமாளைத் தொழுதாயோ!
புரட்சித்தாய் ஜெயலலிதா
பெருமைகளை படித்தாயோ!
வீர நாச்சி பூமிகண்டு
தீரன் சின்ன மலைபுகழ்ந்து
கொங்கு நாடு தமிழ் மணந்து
குளிர் நிறைந்து வருவாயோ!

வரும் வழி ஈரோடுதான்
பெரியாரின் பூமியது 
சுயமரியாதை கற்றும்
சேலம் கண்டும் அறிவாயோ!
காஞ்சிபுரம் வந்தாயோ!
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
உடைமையது பற்றினாயோயோ!
உடன்பிறப்பும் ஆகினாயோ!

வங்கக் கடல் மெரினாவில்
சிங்கமவன் அண்ணாவுடன்
தங்கமகன் எம்ஜியாரும்
கண்ணுறங்கப் பாடினாயோ!
சென்னைக்கோட்டை தலைவாசல்
உன்னைக்காட்டி அசத்தினாயோ!
அன்னையவள் அரியணை
தன்னை வலம் வந்தாயோ!


தமிழகம் மேலோங்க 
தளராது பாடுபட்டு
தரணியில் தனிப் புகழ்
தாயம்மாள் ஆட்சியென்று
பாரளும் மன்றம் ஏறி
பட்டொளி வான் வீசி 
பறக்கும் அம்மா கொடியேற்று
பாரெங்கும் புகழ் போற்று.

கொ.பெ.பி.அய்யா.

















No comments:

Post a Comment