Monday 5 May 2014



















அறிவுக்கு மஞ்சமில்லை!


வாலிபம் தொலையவில்லை
வாழ்ந்தும் அலுக்கவில்லை.
வயதை மதிக்கவில்லை--காதல்
வறுமை எனக்கில்லை.

ஏதும் சேர்க்கவில்லை
எதையும் இழக்கவில்லை
எழுத்தன்றி வேறில்லை--இதுவும்
எனக்கென்று மறைவில்லை.

பொருளுக்கும் ஆசையில்லை
பொய்க்கவும் தேவையில்லை.
அருளுக்குக் குறைவில்லை--எழுதும்
திருவுக்கும் வரைவில்லை.

காவலும் எனக்கில்லை
காத்திடக் கனமில்லை.
ஏவலும் எவரில்லை--வீணே
எதிர்ப்பார் யாருமில்லை.

மனத்திற் கவலையில்லை
இனத்திற் பகையில்லை.
கணமும் நாடவில்லை--யாருங்
காணவும் தேடவில்லை.

கற்றதும் ஒளிவில்லை
கருத்தினில் பழியில்லை.
படைப்புக்கு அழிவில்லை--நூல்
பதிப்பிக்க வழியில்லை.

உறவுக்குப் பஞ்சமில்லை
உதவிக்குத் தஞ்சமில்லை.
அறிவுக்கு மஞ்சமில்லை--அது
ஆக்கத்தில் துஞ்சவில்லை.

விதியையும் நம்பவில்லை
நிதியையும் எம்பவில்லை
மதியன்றி வேறில்லை-நற்
கதியுண்டும் ஐயமில்லை.

எண்ணம் வேறில்லை 
வண்ணம் மாறவில்லை.
திண்ணம் துறக்கவில்லை--எம்ஜியார் 
இன்னும் இறக்கவில்லை.


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment