Thursday 30 April 2015

தனக்குத்தானே தீ

தனக்குத்தானே

தனக்குத் தானே படிப்பவன்
தலையில் தீ வைப்பவன்.
எனக்குத் தெரியும் என்பவன்
எரிவது புரியாமல் அழிகிறான்.

மல்லாக்கப் படுத்துத் தன்
மார்மீதே உமிழ்கிறான்.
சொல்லாக்கம் விளங்காமல்
சீர்கெட்டு உளர்கிறான்.

தன்னைத் தானே பாறைமீது
முன்னை முட்டி படுகிறான்
கண்ணைக் கட்டி குழியிலே
மண்ணை மூடி விழுகிறான்.

ஆளாக்கி விட்டவரை
கீழாக்கிப் பழிக்கிறான்.
பாழாக்கும் பொல்லோரை
தோளாக்கி இழிகிறான்.

ஊரு கெட்டுப் போனாலும்
தூரம் போய் வாழலாம்.
பேரு கெட்டு நாறிபோனால்
யாரிடம் போய் சேரலாம்.

குடிகாரன் சொல்வதெல்லாம்
அதிகாரம் ஆகுமா?
அரிதார வேசமெல்லாம்
அழியாமல் போகுமா?

ஆடும்வரை ஆட்டமெல்லாம்
கூடும்சனம் கூட்டமெல்லாம்
வீழும்வரை இரசிக்கத்தானடா
வீழ்ந்தபின் சிரிக்கத்தானடா.

தூண்டிவிடும் கோழைத்தனம்,
தூண்டில்விழும் ஏழைத்தனம்.
ஆண்டிமடம் பேடித்தனம்,
ஆண்டதுண்டா அடிமைத்தனம்?

கொ.பெ.பி.அய்யா.

Monday 20 April 2015

அம்மாவின் ஆட்சி.

அம்மாவின் ஆட்சி.

அம்மாவின் ஆட்சி ஆளுந்தமிழாட்சி.
அண்ணாவின் தம்பி எம்ஜியாராட்சி.
ஆயிரம் யுகங்கள் அது நிலையாட்சி.
ஆலய முகங்கள் அவர் புகழ்சாட்சி

ஏழைகள் வயிறு குளிர்ந்திட்ட ஆட்சி.
நாளைய கவலை தொலைந்திட்ட ஆட்சி.
அடிநிலைத் தமிழன் வளர்ந்திட்ட ஆட்சி.
விடியலில் உழவன் விழித்திட்ட ஆட்சி.

பாமரன் இல்லா பழந்தமிழ் ஆட்சி.
கோமள வள்ளி குலமகள் ஆட்சி.
தேவைகள் திகட்டிய திருமகள் ஆட்சி.
நோவுகள் அகற்றிய நலந்திகழ் ஆட்சி.

அறிவியல் புரட்சி நிறுவிய ஆட்சி.
அலுவல் வறட்சி அருகிய ஆட்சி.
மனதும் நிறைந்த ஏழையின் ஆட்சி.
மலர்ந்தது இராமன் தூய்மை ஆட்சி.

கொ.பெ.பி.அய்யா.