Tuesday 22 December 2015

அம்மாவியம்.

அம்மாவியம் 3

பதறி ஒடுங்காதே!
பாவம் எண்ணாதே!
பின்னால் ஒளியாதே!
பீதி நம்பாதே!
புண்படப் பேசாதே!
பூச்சியாய் வாழாதே!
பெண்டீரை இகழாதே!
பேதம் பழகாதே!
பைத்தியனாய் திரியாதே!
பொறாமை கொள்ளாதே!
போர்க்குணம் புதைக்காதே!
பௌசு பாராட்டாதே!
அப்பியாசம் தள்ளாதே!

மண்ணை துறக்காதே!
மாதாவை மறக்காதே!
மிகுந்தது மறைக்காதே!
மீட்டது சிதைக்காதே!
முன்சொல் மறுக்காதே!
மூத்தோரை வெறுக்காதே!
மெத்தனம் பேணாதே!
மேடைமொழி கேளாதே!
மையல்வெறி மாளாதே!
மௌசு மயங்காதே!
அம்மாவழி விலகாதே!

கொ.பெ.பி.அய்யா.

Saturday 19 December 2015

பார்த்து விலகு.

பார்த்து விலகு!

பார்த்து விலகு மனிதா- அரசியல்
பைத்தியம் திரியும் பொதுவா.
மனிதன் போலவே பேசும்-உன்னை
மயக்கத் தான்வலை வீசும்.

ஆவிகள் அலையும் மனிதா-அரசியல்
பாவிகள் அவரே அறிவாய்.
ஆசைகள் காட்டி மயக்கும்-உன்னை
அறிவினை நீற்றி வசக்கும்.

நல்லவர் போன்றே மனிதா-அரசியல்
நாடகம் செய்வார் புரிவாய்.
சொல்வோம் செய்வோம் என்பார்-உன்னை
கொள்ளை அடித்தே தின்பார்.

பொதுநலம் செத்தது மனிதா-அரசியல்
சுயநலம் தானது தெளிவாய்.
தொழிலாய் ஆனது அரசியல்-உன்னை
துறவியாய் விட்டது பொதுவியல்.

தேர்தல்க் காலம்  மனிதா-அரசியல்
தீர்தல்க் கோலம் வரைவாய்.
மயக்கும் மொழிகளைத் தள்ளு-உன்னை
பயக்கும் வழிகளை வெல்லு.!

பாசம் தாய்மை மனிதா- அரசியல்
தேசம் செய்வோம் விரைவாய்.
இரட்டை இலைதான் சின்னம்-உன்னை
இமைக்குள் காக்கும் திண்ணம்.!

கொ.பெ.பி.அய்யா.

அன்புள்ள அம்மாவுக்கு.

அன்புள்ள அம்மாவுக்கு.

அன்புள்ள அம்மாவுக்கு உந்தன்
ஆருயிர்ச் செல்வங்கள்-அன்புடன்
வந்தனம் கூறி நன்றியுடன்
சிந்தையிற் கடிதம்.

காமராசர் அண்ணா எம்ஜியார்
சாமிகள் வழியில்-அம்மா
நீயும் எம்முடை உயர்வில்
நீள்கிறாய் வாழி!

கல்வியொன்றே செல்வம் என்றே
சொல்லிய முன்னோர் --உண்மை
கண்டுந்தன் நாடும் நிமிர்த்தியும்
வென்றயம்மா பூர்த்தி!

பெற்றது மட்டும்தான் பெற்றோர்
மற்றது எல்லாம்நீ--நற்றார்
கற்றது நடுஊர் கனிமரம்
உற்றதும் உன்னறம்.

படிப்பதற்கு என்னென்ன வேண்டும்
மடிக்கணினி வரைதான்--தத்தாக
தானெடுத்தாய் தாயே உனக்காக
நாங்கள் இருக்கிறோம்.

கோடி கோடியாய் குழந்தைகள்
கூடிய செல்வங்கள்--அம்மாநீ
தேடிய சொந்தங்கள் நாங்கள்
நீடியும் நீயாள்க!

கொ.பெ.பி.அய்யா.


அன்புள்ள மகனுக்கு.


அன்புள்ள மகனுக்கு.

அன்பு மகனுக்கு தாயின்
அன்புக் கடிதம் வரைகிறேன்.
அம்மா உந்தன் ஆன்மாதான்
வாழும் நானுன் கழகமாய்
நெஞ்சம் வாழ்கிறேன் ஆயிரம்
காலம் தொடரும் நிரந்தரந்தான்.
பந்தம் பாசம்  நானேதான்
சொந்தம் எனக்கு நீயேதான்.

உணவாய் நலமாய் நானேதான்.
உடுத்தத் துணியும் நானேதான்.
உறங்க விடுதியும் அமைதியும் நான்
வழங்கும் அரசும் அம்மா நான்.

ஆலயந் தோறும் அன்னதானம்
அட்சய பாத்திரம் நானேதான்.
பசியை தொலைத்த மேகலையே
பசுமை அம்மா நானேதான்.

அன்ன பூரணி ஆள்வதும்
அம்மா அரசு வாழ்வதும்
மகனே மனது சாட்சியே
சுகமே அம்மா காட்சியே.

தமிழில் அம்மா என்றாலே
தர்மம் என்பார் என்னாலே.
அனாதை அற்ற தமிழ் நாடே
ஆனது தொட்டில் ஒன்றாலே.

ஏழை என்றொரு பாவச் சொல்
இல்லை என்றானது நானே சொல்.
கடமை உனது செயலாலே
நிசமே அம்மா நினைவாலே.

கவிஞர்கொ.பெ.பி.அய்யா.



Wednesday 16 December 2015

அம்மாவியம் 2

அம்மாவியம் 2

சண்டைக்கு முந்தாதே!
சாதிக்கப் பிந்தாதே!
சிந்தை அடக்காதே!
சீற்றம் முடக்காதே!
சுதந்திரம் பிழைக்காதே!(பிழைக்காதே-தவறாகப் பயன்படுத்தாதே)
சூதனம் பழகாதே!(பிறரை அழிக்க எண்ணாதே)
செருக்கு முறுக்காதே!
சேவை வெறுக்காதே!
சைவம் அழிக்காதே!
சொல்லுக்கு மயங்காதே!
சோம்பி ஒடுங்காதே!
சௌதாயம் வேண்டாதே!(சௌதாயம்-சீதனம்,நன்கொடை,கையூட்டு)
அச்சம் தூண்டாதே!

தமிழை கழிக்காதே!
தாய்தந்தை ஒதுக்காதே!
திமிர் பேசாதே!
தீவினை முனையாதே!
துணைக்குத் தயங்காதே!
தூய்மை கெடுக்காதே!
தெய்வம் பழிக்காதே!
தேசம் மறக்காதே!
தையலர் இழிக்காதே!(தையலர்-பெண்டீர்)
தொண்மை விலக்காதே!(தொண்மை-பழமை-மரபு)
தோல்விக்கு அஞ்சாதே!
தௌலம் பிசகாதே! (தௌலம்-துலாக்கோல் தர்மம்--நடு நிலை)
உத்தமம் மாறாதே!(உத்தமம்-சத்தியம்-மேன்மை-தர்மம்)

கொ.பெ.பி.அய்யா.



Tuesday 15 December 2015

அம்மா நானுன்னுயிர்.

அம்மாதானே நான்.

அம்மாதானே கண்ணே நான்
ஆருக்காக நான்--உன்
அன்புதானே உள்ளே நான்
ஆன்மாவில்தான்.

உயிர்தானே உள்ளேன் நான்
உனக்காக நான்-என்
உதிரம்தானே உன்னில் நான்
உணர்வில்தான்!.

சொந்தம்தானே எல்லாம் நான்
சொத்தாக நான்-உன்
பந்தம்தானே உயிரே நான்
உந்தனால்தான்.

வஞ்சகர்தானே சொல்லும் நான்
அஞ்சாமல் நான்-என்
தஞ்சந்தானே உறவே நான்
நெஞ்சால்தான்!

வாசந்தானே உன்னால் நான்
பாசத்தாய் நான்-உன்
நேசந்தானே தமிழே நான்
பாசையால்தான்.

கொ.பெ.பி.அய்யா.

அம்மாவியம் 1

அம்மாவியம்.

அம்மா மறவாதே!
ஆக்கம் மறுக்காதே!
இயன்றது மறைக்காதே!
ஈகை ஒளிக்காதே!
உரம் விலக்காதே
ஊக்கம் மழுக்காதே
எண்ணம் கலங்காதே!
ஏற்றம் தயங்காதே!
ஐநிலம் பகையாதே!
ஒழுகாது ஓதாதே!
ஓரமொழி பேசாதே!
ஔவியம் எண்ணாதே!
ஃ என சோராதே!

கடவுளைப் பழிக்காதே!
கடமை கடத்தாதே!
கிடந்து கழிக்காதே!
கீழ்மை சேராதே!
குதர்க்கம் பேசாதே!
கூவித் திரியாதே!
கெட்டது கேளாதே!
கேடு பேணாதே!
கையூட்டு விழையாதே!
கொள்கை தவறாதே!
கோஷம் பழகாதே!
கௌடனை பாராதே!
அக்கடானு அலுக்காதே!

தொடரும்.........................

கொ.பெ.பி. அய்யா.

Thursday 10 December 2015

மக்கள் சிந்தனை கட்டுரை.

மக்கள் சிந்தனை.

மனிதர் எவர்க்கும் இரண்டு முகங்கள் உண்டு.ஒன்று பொய் இன்னொன்று மெய்.புறத்தில் தெரிவது பொய் முகம்.அகத்தில் அமைதி கொண்டிருப்பது தான் மெய்யான முகம்.அந்த மெய்யான முகம் பற்றி அறிந்து கொள்ளும்
வரை சமூகம் ஏமாற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.மெய்யான முகம்
புலப்படாது.நெருக்கமான பழக்கத்தில் கூட ஓரளவுதான் வெளிப்படும்.
அதனால்தான் அருகில் உள்ளவர்கள் கூட அசந்துவிடுகிறார்கள்.இன்றைய
அரசியல்வாதிகள் தொண்ணூற்றொன்பது சதவிகதம் பேர் மெய்யான முகத்தை புதைத்து வைத்துக்கொண்டு பொய்யான முகம் காட்டித்தான் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

அரசியல் என்றாலே ஏமாற்று வித்தை என்பதுதான் இன்றைய  மக்களின் அரசியல் பற்றிய கணிப்பு.ஏனென்றால் அரசியல் நேர்மை என்பதெல்லாம்
பெருந்தலைவர் காமராசர்,அறிஞர் அண்ணா,புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
ஆகிய அரிய மனிதர்களோடு காலமாகிவிட்டது.மேற்கண்ட தலைவர்கள்
கூட தாங்கள் சார்ந்திருந்த இயக்கங்களோடு மக்கள் சிந்தனையோடு கருத்து வேறுபாடு கொண்டார்கள்,பிரிந்தார்கள் ,நின்றார்கள்,வென்றாகள்.மீண்டும் அந்தப்பக்கம் அவர்கள் எட்டிப்பார்த்து மெனக்கெடவில்லை.அதுதான்
அவர்களின் தனித்தன்மைக்கும் வெற்றிக்கும் காரணமாகத் துணையானது.

ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் இவர்களின் வழிகாட்டுதல்களின்
முறைகளுக்கு நேர்மாறாக உள்ளனர்.குடும்பத்திற்காக சில இயக்கங்கள்,
சுய பாதிப்புகளுக்காக சில கட்சிகள் எனும் நிலையில்தானே நம் நாட்டு
அரசியல் உள்ளது.

ஒருவர் ஒரு இயக்கத்திலிருந்து ஏதோ ஒரு பொய்யான குற்றப்பழி சுமந்துகொண்டு வேதனையோடு வெளியில் வருகிறார்.தனக்கு
நேர்ந்த சதிமோசடிகள் பற்றி சந்திகளில் முழக்கி மக்களிடம் நியாயம்
கேட்கிறார்.பின்பு சில நாட்களில் எந்த வேகத்தில் வந்தாரோ அதே வேகத்தில்
அடுத்துவரும் தேர்தலில் அவர்களோடு கூட்டணியென்று இணைகிறார்.
அப்படிப்பட்டவர் ஏன் அந்த இயக்கத்தை விட்டு வெளியேற வேண்டும்.
தனி க்கட்சி தொடங்க வேண்டுமென்று மக்கள் யோசிக்கமாட்டார்களா!
அவரைப்பார்த்து கேள்விக்கணை தொடுக்க மாட்டார்களா!யோசித்தாரா
அவர்!

என்னைக்கேட்டால் அவர் ஏற்றுக்கொண்டிருந்த தலைமையைவிட
அவர் நேர்மையானவர்தான்.ஒழுக்கமானவர்தான்.சிறந்த அரசியல் வாதிதான்.
நல்ல உழைப்பாளிதான்.யாரும் மறுக்கமுடியாது.ஆனால் அவர் எடுத்த
முடிவில் நிலைத்து நின்று தாக்குப்பிடிக்க இயலாத அவருடைய தடுமாற்றம்தான் அவரின் சறுக்கலுக்கும் அரசியல் பின்னடைவுக்கும் காரணம் என்பதை அவராலும் மறுக்கமுடியாது.இனிமேலாவது அவர் விழித்துக்கொண்டால் அவருக்கு நல்லது.

கட்டிடம் இடிக்கப்பட்டது என்பதற்காக ஒரு கட்சி.அப்புறம் எவரால் பாதிக்கப்பட்டாரோ அவரோடு உறவு.இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான
செயல்தானென மக்கள் சிந்திக்க மாட்டார்களா என்ன!இன்னும் சில பாவப்பட்ட பக்கிரிகள் இருக்கிறார்கள்.ஒதுங்கியிருக்கும் போது இப்போதைய எதிரிகள் என வரிந்துகட்டிக்கொண்டு வண்ண வண்ண வார்த்தைகளால் மெனக்கெட்டு அலங்காரம்  செய்து அவர்களின் தற்காலிக அரசியல் எதிரிகளின் ஊழல் கணக்குகளை புள்ளி விவரங்களோடு ஒப்பிப்பார்கள்.அடுத்து அதை மறந்துவிட்டு ஒன்றிரண்டு சீட்டுகளுக்காக தேர்தலில் கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் அவர்களைப்போல் உத்தமர்கள் இல்லை என்பார்கள்.அன்று அந்த நாறவாய் பேசியதை அந்த சந்தர்ப்பவாதிகள் மனச்சாட்சிப்படி மறக்காமல் பொய்சாட்சிக்காக உண்மைகளை மறைத்துப் பேசுவதை மக்கள்புரிந்து கொள்ளமாட்டார்களா என்ன!

ஆமா! நான் ஒன்றைப் புரிந்து கொண்டுதான் புரியாதுபோல் கேட்கிறேன் இவர்களெல்லாம் மக்களாகிய நம்மைப்பற்றி எந்த வகையில்தான் கணக்கு வைத்துள்ளார்கள்!ஏமாளிகள் என்றா !இல்லை! மக்கள் மறந்திருப்பார்கள் என்றா!கொஞ்சம் குழப்பமாகத் தான்  உள்ளது.ஆனாலும் தெளிவாகத்தான் இருக்கிறோம்.அமைதியாக இவர்களின் பொய்யாட்டங்களை வேடிக்கையாக இரசிக்க காசா பணமா என்ன!

காலமெல்லாம் பொழுதைக் கழித்துவிட்டு தேர்தல் நேரம் பார்த்து
தெருக்களில் கூத்துக் காட்டுகிறார்கள்.நடைபயணம் என்கிறார்கள்
நாடக வசனம் பேசுகிறார்கள்.மன்னிப்புக் கேட்கிறார்கள் மன்றாடுகிறார்கள்.
எதற்காக நமக்ககவா!இல்லை!சுயலாப சொந்தக் குடும்பப் பாதுகாப்பிற்காக.
அக்கறை உள்ளவர்கள் அன்று எங்கே போனீர்கள்? இதுவரை செய்யாததை
இனிமேலா செய்துவிடப்போகிறீர்கள்?அப்படி என்னப்பா உனக்கு அக்கறை?
நீ செய்த தியாகமென்ன?சொத்தை இழந்தாயா?சுகத்தை இழந்தாயா?
மக்கள் எங்களுக்காக நீ இழந்தது என்ன?என்ன சொல்லுவாய் நீ!மக்கள்
நாங்கள் கேட்க மாட்டோமென்று எவ்விதம் துணிந்தாய் நீ!உன்னையே நீ
கேட்டுப்பார்.அப்புறம் வெக்கம் உனக்குள் தானாக வரும்.

எவரோ ஒருவர் பாடுகிறார்.மூடு!மூடு!கடையை மூடென்று.பாவி!
திறந்தவரைப்பார்த்து  கேட்கவேண்டிய கேள்வியை திறந்ததை மூட
வழி தேடித்தவிக்கும் அம்மாவைப் பற்றி அவதூறாக விமர்சிக்கிறார்.
பாவம்!.ஆட்சியை விமர்சிக்கத்தான் நாகரிக உரிமையே தவிர தனிநபர் சுய
அடிப்படை உரிமைகளை விமர்சிக்க எவருக்கும் உரிமை இல்லை.
இது பாவச்செயல் என்றும் புரியாமல் தனிநபர் விமர்சனம் செய்கிறார்
பாவம்!

இன்று பேசுகிறார்களே அதனால்தான் வெள்ளம் இதானால்தான் சேதம்.அதை அப்படிச்செய்திருக்கலாம் இதை இப்படிச்செய்திருக்கலாம் என்று.இவர்கள் என்றைக்காவது ஒழுக்கமாக சட்டசபையில் இருக்கை அமர்ந்து பேசியது உண்டா!இவர்கள் இருந்த நாட்களைவிட பறந்த நாட்கள்தானே அதிகம்.
வரண்டா வரைவந்து வருகைப்பதிவில் கையொப்பமிட்டு கூலி வாங்கிக் கொண்டு வேலி தாண்டி கூவி விட்டுப்போனவர்கள்தானே இவர்கள்!இவர்களிடம் மக்கள் சிந்தனை எங்கே உள்ளது!இயற்கையின் சீற்றத்திற்கு
யார்தான் பொறுப்பேற்க முடியும்.அந்த அளவிற்கு இயற்கையின் திடீர்
மாற்றங்களை முன்னறிந்து எச்சரிக்கை செய்யக்கூடிய தொழில் நுட்ப
முன்னேற்றத்தை நமது நாடு இன்னமும் கண்டடையவில்லை என்பதுதான்
நம்முடைய துர்பாக்கிய நிலை.

தீட்டிய திட்டங்கள் செய்ய முனையும் முன்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுதான்
நம்முடைய போதாத காலம்.தொடர்ந்தும் அம்மா ஆட்சி நிலைத்திருந்தால்
இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காதுதான்.என்ன செய்வது விதி யாரைத்தான்
விட்டது.சரி போனது போகட்டும்.இந்த முறையாவது விழிப்போடிருந்து
மக்கள் சிந்தனை உள்ளவர் அம்மாதானென தெளிந்து புரிந்து கொண்டு இனியாவது நடப்பதெல்லாம் நலமாக நடக்கட்டும் என்று அம்மாவையே நம்பித் தொடர்வோமாக!

வாழ்க எம்,ஜி.ஆர் நாமம்.

நன்றி!

கொ.பெ.பி.அய்யா.. 

Monday 7 December 2015

நாடககககாரர்கள் எங்கே?



காணவில்லை சிலரை!

தமிழ்நாட்டில் தர்மம் பேசும் சிலரை காணவே இல்லை.எங்கெங்கோ பிறந்தவர்கள் பிழைப்பவர்கள்.தமிழ் மக்களின் துயர்கண்டும் காதில் கேட்டும் மனம் துடித்துப்போய் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகவே வந்து வரிந்து கட்டிக்கொண்டு மனித நேயத்தோடு உதவும் பணிகளில் உற்சாகத்தோடு உழைத்து வருகிறார்கள்.அப்படிப்பட்ட மனித உள்ளங்களுக்கு தமிழர்களாகிய நாம் என்றென்றும் கடன்பட்டவர்களாய் காலம் உள்ளவரை மறவாதிருப்போம்.வாழ்க அந்த நல்லவர்கள்.

தமிழ் என்று கூறி தமிழால் பிழைப்பவர்களை காணவில்லை.தமிழர் அல்லாத பிற மாநிலத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் முக்கியஸ்தர்களும் மற்றும் தமிழர்களால் பயனடையாத பிறமொழி நடிகர் பிரபலங்களும் இங்கு உதவிப் பொருட்களோடு வந்து உடல் வருத்தி உள்ளன்போடு எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி உதவிப்பணிகளில் தங்களை நேரடியாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பதை நம் கண்களால் நிசமாகக் காண்கிறபோது நம் விழிகள் நம்மையும் அறியாமல் கசிகின்றன.இவ்வுலகில் மனிதம் மரித்துப்போகவில்லை என்பதற்கு இதைவிட சாட்சிகள் வேறென்ன வேண்டும்!

இப்படி நல்லோர்கள் வாழும் பூமியில் இப்படிப்படிப்பட்டஎதிர்பாரா இடர்கால நெருக்கடி இன்னல்களைக்கூட சிலர் தங்களின் சுயலாப சந்தர்ப்ப வாய்ப்பு களாக வெக்க்ப்படாமல் அரசியல் பண்ணவும் ஆதாயம் தேடவும் இத்தருணத்தை பயன்படுத்திக்கொள்ளக் கூச்சப் படுவதில்லை என்பதுதான் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேதனை.. இவர்கள் மனித நேயம் பேசுவார்கள் ஆனால் மனம் செத்துத் திரிவார்கள்.

இன்னும் சிலரும் இருக்கிறார்கள்.அரசு அதைச்செய்யவில்லை இதைச் செய்யவில்லை என அங்கலாய்த்துக் கொள்வார்கள்.ஆனால் ஒரு சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப்போட மாட்டார்கள்.வீட்டுமுன் கிடக்கும் காற்றில் பறக்கும் தூசைக்கூட அரசாங்கம் வந்துதான் எடுத்துப்போட வேண்டும்  என்றே
எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.குறைபேசிக் குற்றம் காண்பதற்காகவே சிலர் செத்து நாறும் பிணங்களாய் சமுதாயத்தை முகம் சுளிக்க வைக்கிறார்கள் கேவலம்!

மற்ற சாதாரண காலங்களில் இவ்வாறு எதிர்பார்ப்பதும் தவறில்லை தான்.ஆனால் இப்படிப்பட்ட இக்கட்டான அசாதாரண காலங்களில் கூட இதை அரசுதான் செய்யவேண்டும் என்று அடம் பிடிப்பதும் அரக்கத்தனமான ஈவிரக்கமற்ற செயலல்லவா!.நம்மால் நாமே செய்யக்கூடிய சின்னச்சின்ன வேலைகளைக் கூட நாமே செய்தால் என்னதான் தாழ்ந்துவிடப் போகிறோம்
என்பதுதான் புரியவில்லை.

இப்படிப்பட்ட அவசரகாலங்களில் பொதுமக்களாகிய நாமும் அரசோடு இணைந்தும் ஒத்துழைத்தால்தான் அரசும் அதன் அவசரப் பணிகளில்
முழுமையாகத் தன் கவனம் செலுத்தி மீட்ப்புப் பணிகளில் முன்னேறமுடியும் என்பதைசிலரால்ஏன்புரிந்துகொள்ளமுடியவில்லையோதெரியவில்லை.
இதை அரசியல் தலைவர்களும் மக்களுக்கு உணர்த்துவதில்லை.மாறாக மக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிடுவதே அவர்களின் கேடுகெட்ட புத்தியாக உள்ளது.

எப்படிப்பட்ட நேரங்களில் எதை அரசியலாக்கலாம் என்ற நியாய தர்மமே
இல்லையா?மனச்சாட்சிகள் மரத்துப்போனதா?அல்லது மடித்துபோனதா?அறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன அரசியல் தர்மம் படித்திருந்தால் இவர்களுக்கும் அரசியல் தர்மம் தெரிந்திருக்கும்.என்ன செய்வது காலத்தின் சோதனைதான் இது.காலம்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.

கொ.பெ.பி.அய்யா.

சென்னையும் கண்டது.

மொழியும் இனமும் மதமும் எங்கே!
மனிதம் மட்டும் மதித்தது இங்கே.
உறவும் முறையும் உயிரென ஒன்றே.
பரவும் சமூகம் பயின்றது இன்றே!

இடரில் மனிதன் இடறும் போதே
படரும் பழமை பரிவினில் தானே
உடுக்கை இழந்தான் உணர்வினைப் போலே
முடுக்கும் உதவி மனிதம் தானே.

உயிரும் உயிரும் உறவெனக் கண்டே,
உயிரும் தடையோ உறுதியும் கொண்டே,
உதவும் மனிதம் உலகினில் உண்டே.
இதுவும் நிசமே இறப்பில்லை தொண்டே!

சென்னையும் கண்டது முன்னைய சொந்தம்.
தன்னையும் கண்டது நன்னய பந்தம்.
மகத்துவம் கண்டது சகத்துவம் என்றும்.
இகத்துவம் கண்டது சமத்துவம் ஒன்றும்.

பேரிடர் பாடமும் ஆறிட வேண்டாம்.
யாரிடம் பேதமும் கூறிட வேண்டாம்.
ஊரிடம் வாசமும் மாறிட வேண்டாம்.
பாரிடம் பாசமும் மீறிட வேண்டாம்.

கொ.பெ.பி.அய்யா.


அம்மா நான் உன்னருகே.

அம்மாதான் அம்மா!

நான் இருப்பேன் நின்னருகே
ஏன் கலக்கம் என்னுறவே!
வீண் மயக்கம் என்னதான்!
தான் துடைப்பேன் அம்மாநான்!

என்நெஞ்சம் உன் வாசம்.
உன்தஞ்சம் என் நேசம்.
நம்சொந்தம் முன் பந்தம்
அம்மா நான் என்றென்றும்.

எண்ணும் போதும் சும்மாதான்.
எண்ணித் தேடும் அம்மாநான்.
என்னை முந்தி சிந்தைதான்.
உன்னை கண்டு ஆறும்நான்.

அம்மா துணை இருக்கிறேன்.
அஞ்சும் வினை அறுக்கிறேன்.
தும்முந் துயர் பொறுப்பேனோ!
அம்முன் அர வணைப்பேனே!

அம்மா தான் அம்மாவாம்.
சும்மா தான் மற்றெல்லாம்.
என்னுயிர் போல் போற்றும்
உன்னுயிர்  நான் அம்மா.

இரட்டை இலையே செழித்திருக்கு.
புரட்சிசித் தலைவி பலமிருக்கு.
இருட்டை விலக்கிய கழகமடா!
நிரந்தர முதல்வர் அம்மாடா!

கொ.பெ.பி.அய்யா.




Sunday 6 December 2015

அரசியல் தர்மம் கட்டுரை.

அரசியல் தர்மம்.

கண்களை நம்பாமல்தான் நீதி தேவதை கண்களைகட்டிக்கொண்டுள்ளாள்.சில நேரங்களில் காட்சிகளும் பொய்யாகிப் போகின்றன.ஆகவேதான் சாட்சிகளின் நேர் மொழிகளை கேட்கமட்டும் தன் செவிகளைமட்டும் தீட்டி வைத்துக் கொண்டு உண்மைகளை ஆராய்கிறாள் நீதி தேவதை என்பதே நீதி தர்மத்தின் நம்பிக்கையாக உள்ளது,ஆனால் இன்றைய போலியான அரசியல் வாதிகள் நேர்மையாக அரசியல் செய்யும் மெய்யான பொதுவாழ்வை மேற்கொண்டு நாடே வீடென்றும் நாட்டு மக்களே தன் சொந்தமென்றும் சுயநலம் துறந்து அரசியல் அறம் நிலை கொண்டு மக்கள் தொண்டாற்றும் நல்லோரை எவ்விதத்தில் ஒழித்து அழிக்கலாம் என்பதையே தங்கள் கொள்கையாகக் கொண்டு அதற்கான முயற்சிகளில் தங்கள் வாழ்நாளை அற்பணித்து அலைகிறார்கள்.அதற்காக பொய்வழக்குகள் போட்டும் பொய்ச்சாட்சிகளை இட்டுக்கட்டி சோடித்தும் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

மற்றவர் மீது குற்றம் சுமத்தும் எவரும் சுத்தமானவர்கள் இல்லைஎன்பதையும் நாட்டு மக்கள் புரிந்துகொள்ளாமலும் இல்லை.ஆனாலும் இந்த வேடதாரிகள் எந்த நம்பிக்கையில் தங்கள் மனச்சாட்சியை மறுத்தும் மக்களை ஏமாற்றவும் வெக்கமில்லாமல் விதிகளில் திரிகிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.மக்களுமா மனச்சாட்சியை மதிக்காமல்இருப்பார்கள்.அல்லது மறந்திருப்பார்கள் என்ற நப்பாசையா?அடப்பாவிகளா இன்று திடீர் ஆயத்த அரிச்சந்திரர்களாக மாறிவிட்டீர்களாக்கும்.நாங்களும் நம்பிவிட்டோம் நாசமாய்ப் போக.அடப்போங்கடா போக்கற்றவங்களா!

இயற்கையின் பேரழிவில் இடர்பட்டுக்கிடக்கும் அப்பாவிமக்களிடம் போய் அரசியல் பேசுகிறீர்களே!இதுதான் அரசியல் தர்மமா? இதுதான் அதற்கான தருணமா?பேரிடர் என்பது உங்களைப்போல் திட்டம் தீட்டி வஞ்சம் தீர்க்கும் வடிவிலா வேடமாட வரும்!எதிர் பாரா திடீர் சூழலில் திடீர் தாக்கமாக விளைவதுதானே இயற்கைப் பேரிடர் என்பது.இதற்கு யார்தான் பொறுப்பாக முடியும்.?அதையும் அஞ்சாமல் எதிர்கொள்வதுதான் திறமை.இதையும் ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டு சமாளிப்பதுதான் அம்மாவின் சாதனைக்கு சான்றாக இதுவும் இயற்கை ஏற்படுத்திய சோதனைகளில் ஒன்று.இடர்களைக் கடக்கும் வல்லமை அம்மாவுக்கு அருளப்பட்டுள்ளது என்பதையும் ஆண்டவனும் அறிவான்.அதனால்தான் என்னவோ ஆண்டவனும் சோதித்துப் புடம் போட்டுப் பார்க்கிறான்.

சோதிக்கிறவனே சாதிக்கவும் துணை நிற்பான்.மீட்புப்பணிகளில் தீவிரம் காட்டிக்கொண்டிருக்கும் அம்மா வேறு சிந்தனைகளில் வீண் பேச்சுக்கு வேண்டாம் வெட்டித்தனம் என்று அமைதி காத்து வருகிறார்.தங்கள் இன்னுயிரைப் பணயம் வைத்து பகல் இரவு பாராமல் பாரபட்சமின்றி மீட்புப்பணிகளில் ஈடுபட்டுவரும் அரசுப்பணியாளர்கள் மற்றும் சமூகத் தொண்டர்கள் படைகளாக அணிவகுத்து பாடுபடுகிறார்கள்.அவர்களின் எதிர்பார்ப்பில்லா வீர தீர செயல்களை பாராட்டும் பக்குவம் இல்லை என்றாலும் நன்றிகூறும் நல்லெண்ணம் இல்லை என்றாலும் அப்புண்ணியர்களின் தூய மனங்களை காயப்படுத்தி வேடிக்கை பார்க்காமல்
இருந்தாலே தங்களுக்கும் பாவ விமோச்சனம் கிட்டும்.

நன்றி

கொ.பெ.பி.அய்யா.

Saturday 5 December 2015

மனிதம் மறுபிறவி எடுக்கட்டும் கட்டுரை.

மனித நேயம் வெளிப்படட்டும்.

அன்பான அகில உலகில் வாழும் தமிழ்ப் பேரினமே!அனைவர்க்கும் அன்பான வேண்டுகோள்.நூறாண்டு கால வரலாற்றில் இதுவரை தமிழகம் சந்தித்திராத இயற்கைப்பேரிடரை தமிழகம் இன்று கண்டு தாங்கொண்ணா இன்னலை சந்திக்க நேர்ந்துள்ளது என்பது வேதனையிலும் வேதனை.தமிழத்தில் குறிப்பாக சென்னை மாநகரும் அதன் சுற்றுப்புறமும் இத்துயர நிகழ்வால் அப்படியே முற்றிலும் தலைகீழாகப் புரட்டிப்போடப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.

கூடியமட்டும் அரசு எந்திரங்கள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் மீட்டிக்கொண்டு தர அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறது என்பதும் ஒப்புக்குச்சப்பாக சொல்லவில்லை.உண்மையை மறைத்து இந்த நேரத்திலும் இக்கோர நிகழ்வை சிலர் அரசியல் ஆக்குவதுதான் வருத்தமாக உள்ளது. மானுட சுய மாச்சர்யங்களுக்கு இது களமோ தருணமோ அல்ல.ஒட்டுமொத்த மனித குலமும் பாகுபாடின்றி மனித நேய வெளிப்பாடோடு கைகோர்த்து இணைந்து நம் மனித இனத்தை இப்பேரிடரிலிருந்து மீட்டு மீண்டும் வாழவைக்க ஒருமனதோடு செயல்படவேண்டும் என்பதே இதயமுள்ளவர்களின் இன்றைய ஏகோபித்த வேண்டுகோளாய் உள்ளது என்பதே உண்மையிலும் உண்மை.

இன்றும் அரசோடு இணைந்து சமூக ஆர்வலர்களும்,எண்ணற்ற தொண்டு நிறுவனங்களும் பொதுமக்களும்,மாணவச்செல்வங்களும் அயராது உதவிக்கரங்கள் நீட்டி உழைத்தும் வருகிறார்கள் என்று எண்ணும்போது இன்னும் மனிதநேயம் மரித்துப்போகவில்லை என்றே தெளிவாகத் தோன்றுகிறது.

என்னதான் அரசு எந்திரங்கள் படாத பாடுபட்டாலும் பொதுமக்களும் ஒத்துழைத்தால்தான் எந்த ஒரு மீட்புப்பணிகளும் முழுமையான வெற்றியை எட்டமுடியும் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

ஆகவே உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் இனத் தோழமைகளே தாங்கள் எல்லோருமே தாய்மண்ணின் மீது தளராப் பற்றுடையவர்கள் என்பதையும் தமிழ்ப்பேரினம் அறியும்.கருணை உள்ளம் கொண்டோர் என்பதும் தாங்கள் அவ்வப்போது தமிழுக்குக் காட்டும் பாசமும் பரிவும் வெளிப்படையானது என்பதும் நம்மினம் நன்றியோடு புரிந்துதான் வைத்துள்ளது.இந்த அவசரமான
காலத்திலும் தங்களின் பொன்னான கொடையுள்ளத்தை கொண்டு தங்களால் இயன்றதை வாரி வழங்கி நமது சொந்தங்களைக் காப்பாற்ற முன்வரவேண்டி தங்களைப் பணிவன்போடு வேண்டி விரும்பி உரிமையோடு கேட்டுக்கொள்ளும் அதே நேரத்தில் உள்நாட்டிலும் வாய்ப்பும் வசதியோடும் வாழும் மனித உள்ளங்களையும், உதவிக்கரம் நீட்ட தமிழ்ப்பேரினம் சார்பாகக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

கொ.பெ.பி.அய்யா
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12313509_929462587136817_3742254452265020584_n.jpg?oh=0e73a20dc6802c2698acc2646f36883e&oe=56D4A646