Saturday 5 December 2015

மனிதம் மறுபிறவி எடுக்கட்டும் கட்டுரை.

மனித நேயம் வெளிப்படட்டும்.

அன்பான அகில உலகில் வாழும் தமிழ்ப் பேரினமே!அனைவர்க்கும் அன்பான வேண்டுகோள்.நூறாண்டு கால வரலாற்றில் இதுவரை தமிழகம் சந்தித்திராத இயற்கைப்பேரிடரை தமிழகம் இன்று கண்டு தாங்கொண்ணா இன்னலை சந்திக்க நேர்ந்துள்ளது என்பது வேதனையிலும் வேதனை.தமிழத்தில் குறிப்பாக சென்னை மாநகரும் அதன் சுற்றுப்புறமும் இத்துயர நிகழ்வால் அப்படியே முற்றிலும் தலைகீழாகப் புரட்டிப்போடப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.

கூடியமட்டும் அரசு எந்திரங்கள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் மீட்டிக்கொண்டு தர அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறது என்பதும் ஒப்புக்குச்சப்பாக சொல்லவில்லை.உண்மையை மறைத்து இந்த நேரத்திலும் இக்கோர நிகழ்வை சிலர் அரசியல் ஆக்குவதுதான் வருத்தமாக உள்ளது. மானுட சுய மாச்சர்யங்களுக்கு இது களமோ தருணமோ அல்ல.ஒட்டுமொத்த மனித குலமும் பாகுபாடின்றி மனித நேய வெளிப்பாடோடு கைகோர்த்து இணைந்து நம் மனித இனத்தை இப்பேரிடரிலிருந்து மீட்டு மீண்டும் வாழவைக்க ஒருமனதோடு செயல்படவேண்டும் என்பதே இதயமுள்ளவர்களின் இன்றைய ஏகோபித்த வேண்டுகோளாய் உள்ளது என்பதே உண்மையிலும் உண்மை.

இன்றும் அரசோடு இணைந்து சமூக ஆர்வலர்களும்,எண்ணற்ற தொண்டு நிறுவனங்களும் பொதுமக்களும்,மாணவச்செல்வங்களும் அயராது உதவிக்கரங்கள் நீட்டி உழைத்தும் வருகிறார்கள் என்று எண்ணும்போது இன்னும் மனிதநேயம் மரித்துப்போகவில்லை என்றே தெளிவாகத் தோன்றுகிறது.

என்னதான் அரசு எந்திரங்கள் படாத பாடுபட்டாலும் பொதுமக்களும் ஒத்துழைத்தால்தான் எந்த ஒரு மீட்புப்பணிகளும் முழுமையான வெற்றியை எட்டமுடியும் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

ஆகவே உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் இனத் தோழமைகளே தாங்கள் எல்லோருமே தாய்மண்ணின் மீது தளராப் பற்றுடையவர்கள் என்பதையும் தமிழ்ப்பேரினம் அறியும்.கருணை உள்ளம் கொண்டோர் என்பதும் தாங்கள் அவ்வப்போது தமிழுக்குக் காட்டும் பாசமும் பரிவும் வெளிப்படையானது என்பதும் நம்மினம் நன்றியோடு புரிந்துதான் வைத்துள்ளது.இந்த அவசரமான
காலத்திலும் தங்களின் பொன்னான கொடையுள்ளத்தை கொண்டு தங்களால் இயன்றதை வாரி வழங்கி நமது சொந்தங்களைக் காப்பாற்ற முன்வரவேண்டி தங்களைப் பணிவன்போடு வேண்டி விரும்பி உரிமையோடு கேட்டுக்கொள்ளும் அதே நேரத்தில் உள்நாட்டிலும் வாய்ப்பும் வசதியோடும் வாழும் மனித உள்ளங்களையும், உதவிக்கரம் நீட்ட தமிழ்ப்பேரினம் சார்பாகக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

கொ.பெ.பி.அய்யா
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12313509_929462587136817_3742254452265020584_n.jpg?oh=0e73a20dc6802c2698acc2646f36883e&oe=56D4A646

No comments:

Post a Comment