Thursday 10 December 2015

மக்கள் சிந்தனை கட்டுரை.

மக்கள் சிந்தனை.

மனிதர் எவர்க்கும் இரண்டு முகங்கள் உண்டு.ஒன்று பொய் இன்னொன்று மெய்.புறத்தில் தெரிவது பொய் முகம்.அகத்தில் அமைதி கொண்டிருப்பது தான் மெய்யான முகம்.அந்த மெய்யான முகம் பற்றி அறிந்து கொள்ளும்
வரை சமூகம் ஏமாற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.மெய்யான முகம்
புலப்படாது.நெருக்கமான பழக்கத்தில் கூட ஓரளவுதான் வெளிப்படும்.
அதனால்தான் அருகில் உள்ளவர்கள் கூட அசந்துவிடுகிறார்கள்.இன்றைய
அரசியல்வாதிகள் தொண்ணூற்றொன்பது சதவிகதம் பேர் மெய்யான முகத்தை புதைத்து வைத்துக்கொண்டு பொய்யான முகம் காட்டித்தான் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

அரசியல் என்றாலே ஏமாற்று வித்தை என்பதுதான் இன்றைய  மக்களின் அரசியல் பற்றிய கணிப்பு.ஏனென்றால் அரசியல் நேர்மை என்பதெல்லாம்
பெருந்தலைவர் காமராசர்,அறிஞர் அண்ணா,புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
ஆகிய அரிய மனிதர்களோடு காலமாகிவிட்டது.மேற்கண்ட தலைவர்கள்
கூட தாங்கள் சார்ந்திருந்த இயக்கங்களோடு மக்கள் சிந்தனையோடு கருத்து வேறுபாடு கொண்டார்கள்,பிரிந்தார்கள் ,நின்றார்கள்,வென்றாகள்.மீண்டும் அந்தப்பக்கம் அவர்கள் எட்டிப்பார்த்து மெனக்கெடவில்லை.அதுதான்
அவர்களின் தனித்தன்மைக்கும் வெற்றிக்கும் காரணமாகத் துணையானது.

ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் இவர்களின் வழிகாட்டுதல்களின்
முறைகளுக்கு நேர்மாறாக உள்ளனர்.குடும்பத்திற்காக சில இயக்கங்கள்,
சுய பாதிப்புகளுக்காக சில கட்சிகள் எனும் நிலையில்தானே நம் நாட்டு
அரசியல் உள்ளது.

ஒருவர் ஒரு இயக்கத்திலிருந்து ஏதோ ஒரு பொய்யான குற்றப்பழி சுமந்துகொண்டு வேதனையோடு வெளியில் வருகிறார்.தனக்கு
நேர்ந்த சதிமோசடிகள் பற்றி சந்திகளில் முழக்கி மக்களிடம் நியாயம்
கேட்கிறார்.பின்பு சில நாட்களில் எந்த வேகத்தில் வந்தாரோ அதே வேகத்தில்
அடுத்துவரும் தேர்தலில் அவர்களோடு கூட்டணியென்று இணைகிறார்.
அப்படிப்பட்டவர் ஏன் அந்த இயக்கத்தை விட்டு வெளியேற வேண்டும்.
தனி க்கட்சி தொடங்க வேண்டுமென்று மக்கள் யோசிக்கமாட்டார்களா!
அவரைப்பார்த்து கேள்விக்கணை தொடுக்க மாட்டார்களா!யோசித்தாரா
அவர்!

என்னைக்கேட்டால் அவர் ஏற்றுக்கொண்டிருந்த தலைமையைவிட
அவர் நேர்மையானவர்தான்.ஒழுக்கமானவர்தான்.சிறந்த அரசியல் வாதிதான்.
நல்ல உழைப்பாளிதான்.யாரும் மறுக்கமுடியாது.ஆனால் அவர் எடுத்த
முடிவில் நிலைத்து நின்று தாக்குப்பிடிக்க இயலாத அவருடைய தடுமாற்றம்தான் அவரின் சறுக்கலுக்கும் அரசியல் பின்னடைவுக்கும் காரணம் என்பதை அவராலும் மறுக்கமுடியாது.இனிமேலாவது அவர் விழித்துக்கொண்டால் அவருக்கு நல்லது.

கட்டிடம் இடிக்கப்பட்டது என்பதற்காக ஒரு கட்சி.அப்புறம் எவரால் பாதிக்கப்பட்டாரோ அவரோடு உறவு.இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான
செயல்தானென மக்கள் சிந்திக்க மாட்டார்களா என்ன!இன்னும் சில பாவப்பட்ட பக்கிரிகள் இருக்கிறார்கள்.ஒதுங்கியிருக்கும் போது இப்போதைய எதிரிகள் என வரிந்துகட்டிக்கொண்டு வண்ண வண்ண வார்த்தைகளால் மெனக்கெட்டு அலங்காரம்  செய்து அவர்களின் தற்காலிக அரசியல் எதிரிகளின் ஊழல் கணக்குகளை புள்ளி விவரங்களோடு ஒப்பிப்பார்கள்.அடுத்து அதை மறந்துவிட்டு ஒன்றிரண்டு சீட்டுகளுக்காக தேர்தலில் கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் அவர்களைப்போல் உத்தமர்கள் இல்லை என்பார்கள்.அன்று அந்த நாறவாய் பேசியதை அந்த சந்தர்ப்பவாதிகள் மனச்சாட்சிப்படி மறக்காமல் பொய்சாட்சிக்காக உண்மைகளை மறைத்துப் பேசுவதை மக்கள்புரிந்து கொள்ளமாட்டார்களா என்ன!

ஆமா! நான் ஒன்றைப் புரிந்து கொண்டுதான் புரியாதுபோல் கேட்கிறேன் இவர்களெல்லாம் மக்களாகிய நம்மைப்பற்றி எந்த வகையில்தான் கணக்கு வைத்துள்ளார்கள்!ஏமாளிகள் என்றா !இல்லை! மக்கள் மறந்திருப்பார்கள் என்றா!கொஞ்சம் குழப்பமாகத் தான்  உள்ளது.ஆனாலும் தெளிவாகத்தான் இருக்கிறோம்.அமைதியாக இவர்களின் பொய்யாட்டங்களை வேடிக்கையாக இரசிக்க காசா பணமா என்ன!

காலமெல்லாம் பொழுதைக் கழித்துவிட்டு தேர்தல் நேரம் பார்த்து
தெருக்களில் கூத்துக் காட்டுகிறார்கள்.நடைபயணம் என்கிறார்கள்
நாடக வசனம் பேசுகிறார்கள்.மன்னிப்புக் கேட்கிறார்கள் மன்றாடுகிறார்கள்.
எதற்காக நமக்ககவா!இல்லை!சுயலாப சொந்தக் குடும்பப் பாதுகாப்பிற்காக.
அக்கறை உள்ளவர்கள் அன்று எங்கே போனீர்கள்? இதுவரை செய்யாததை
இனிமேலா செய்துவிடப்போகிறீர்கள்?அப்படி என்னப்பா உனக்கு அக்கறை?
நீ செய்த தியாகமென்ன?சொத்தை இழந்தாயா?சுகத்தை இழந்தாயா?
மக்கள் எங்களுக்காக நீ இழந்தது என்ன?என்ன சொல்லுவாய் நீ!மக்கள்
நாங்கள் கேட்க மாட்டோமென்று எவ்விதம் துணிந்தாய் நீ!உன்னையே நீ
கேட்டுப்பார்.அப்புறம் வெக்கம் உனக்குள் தானாக வரும்.

எவரோ ஒருவர் பாடுகிறார்.மூடு!மூடு!கடையை மூடென்று.பாவி!
திறந்தவரைப்பார்த்து  கேட்கவேண்டிய கேள்வியை திறந்ததை மூட
வழி தேடித்தவிக்கும் அம்மாவைப் பற்றி அவதூறாக விமர்சிக்கிறார்.
பாவம்!.ஆட்சியை விமர்சிக்கத்தான் நாகரிக உரிமையே தவிர தனிநபர் சுய
அடிப்படை உரிமைகளை விமர்சிக்க எவருக்கும் உரிமை இல்லை.
இது பாவச்செயல் என்றும் புரியாமல் தனிநபர் விமர்சனம் செய்கிறார்
பாவம்!

இன்று பேசுகிறார்களே அதனால்தான் வெள்ளம் இதானால்தான் சேதம்.அதை அப்படிச்செய்திருக்கலாம் இதை இப்படிச்செய்திருக்கலாம் என்று.இவர்கள் என்றைக்காவது ஒழுக்கமாக சட்டசபையில் இருக்கை அமர்ந்து பேசியது உண்டா!இவர்கள் இருந்த நாட்களைவிட பறந்த நாட்கள்தானே அதிகம்.
வரண்டா வரைவந்து வருகைப்பதிவில் கையொப்பமிட்டு கூலி வாங்கிக் கொண்டு வேலி தாண்டி கூவி விட்டுப்போனவர்கள்தானே இவர்கள்!இவர்களிடம் மக்கள் சிந்தனை எங்கே உள்ளது!இயற்கையின் சீற்றத்திற்கு
யார்தான் பொறுப்பேற்க முடியும்.அந்த அளவிற்கு இயற்கையின் திடீர்
மாற்றங்களை முன்னறிந்து எச்சரிக்கை செய்யக்கூடிய தொழில் நுட்ப
முன்னேற்றத்தை நமது நாடு இன்னமும் கண்டடையவில்லை என்பதுதான்
நம்முடைய துர்பாக்கிய நிலை.

தீட்டிய திட்டங்கள் செய்ய முனையும் முன்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுதான்
நம்முடைய போதாத காலம்.தொடர்ந்தும் அம்மா ஆட்சி நிலைத்திருந்தால்
இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காதுதான்.என்ன செய்வது விதி யாரைத்தான்
விட்டது.சரி போனது போகட்டும்.இந்த முறையாவது விழிப்போடிருந்து
மக்கள் சிந்தனை உள்ளவர் அம்மாதானென தெளிந்து புரிந்து கொண்டு இனியாவது நடப்பதெல்லாம் நலமாக நடக்கட்டும் என்று அம்மாவையே நம்பித் தொடர்வோமாக!

வாழ்க எம்,ஜி.ஆர் நாமம்.

நன்றி!

கொ.பெ.பி.அய்யா.. 

No comments:

Post a Comment