Saturday 3 May 2014

பாரதமே சொர்கம்.

























பாரதமே சொர்க்கம்!!

முந்திய நாகரிகம் உயர்
மூத்த குடிமக்கள்.
விந்திய மலை முட்ட
வேண்டிய செல்வங்கள்.
இந்தியத் திரு நாட்டின்
இருப்பென்றெண்ணியே
வந்த பறவையெல்லாம்
வாரிச் சென்றதோ!

பொறுமைப் பூமி இது
பொக்கிசக் களஞ்சியமோ!
வறுமைப்பட்டு பின்
வாடி நின்றதோ!
பெருமை குலைந்து தன்
பிள்ளைப்பசி போக்க
திருமை நாடுகளை முன்
தேடியும் நின்றதோ!

அடிமை செய்தவன் தளை
அறுத்து ஏகினாலும்.
விடிவு வருமென இமை
விழிக்கும் வேளையில்
தடித்த மனத்தினர் தலை
தூக்கிச்சிரித்தனர்..
பிடித்து வளைத்து அமை
பிணையமாக்கினர்.

குடும்பம் குடும்பமாய்
கொத்தடிமைக் கோலம்.
கொஞ்சங் கொஞ்சமாய்
குறைந்திட்ட போதும்
பிஞ்சு இளசுகள் கஞ்சிக்காக
நஞ்சுக் கொடியோரின்
வஞ்சக ஏவலில் நைந்து
வாடுவதோ பாவம்.!.

ஒட்ட ஒரு இடமில்லாமல்
  ஓரம் தேடி உறங்குது.
கட்டில் தேடும் இளசுகளோ
 காடுகளிலில் மறையுது.
தொட்டில் ஆடுங் குழந்தைகளோ
 தொட்டி களில் கதறுது.
மொட்டில் வாடும் பிஞ்சுகளோ
 தட்டில் பிச்சை கேட்குது.

வயிற் றிற்கு சோறில்லாமல்
வழிப் பறிகள் செய்யுது.
பத்து மாதம் சுமந்துபெற்ற
பால கரை விற்குது
வேலை யேதும் இல்லாமல்
வீதிகளில் நிற்குது.
வறுமை செய்யும் கொடுமையில்
வழிதவறிச் செல்லுது.

இந்த நிலைமாற அரசு
ஏற்றும் திட்டமெல்லாம்
வந்திடும் வழிகளிலேயே
சந்துகளில் ஒளிகிறது..
எந்த நிலையிலும் இங்கே
எவருமே சரியில்லை.
சொந்தமாகுமோ அந்த
சுடு காடு எவருக்கும்?

என்னதான் செய்யலாம்
ஏதாவது சொல்லுங்கள்.
பாவம் இந்த ஏழைகள்
பசி தணிக்க உதவுங்கள்.
ஊழல் செய்யும் கோழைகளை
உணர வழி செய்யுங்கள்.
பாழ் படுத்தும் பாவியரை
நாள் கொடுத்து தூக்குங்கள்.

ஆள் எண்ணித் தேடுவீர்!
அடிமைத்தனம் நீக்குவீர்!
தனி நிலைப் பொருளாதாரம்
நனி நிலை தேக்குவீர்!
இல்லாரே இல்லாது
எல்லோரும் ஆக்குவீர்!
வல்லாண்மை கொண்டுமே
வளர்ந்த நிலை தூக்குவீர்!

புதிய விடியலை நோக்கி
புதுமைகள் தேடுவோம்.
நதிகள் கடல் மறக்க
நல்லணைகள் கட்டுவோம்,
பசுமை வண்ணமெங்கும்
பாரெங்கும் பரப்புவோம்.
பசியை மறந்தோமென
பாரதமே சொர்க்கமென்போம்.

அம்மாவின் கரங்களில் 
அனைத்திந்திய அதிகாரம் 
செம்மா நிலை பலம்
செயல் முறைத் தன்திறம்
எல்லாம் கொண்டு தான்
ஏற்றிடும் போதுதான் 
வல்லரசாகிடும் 
வளம் கண்டு உயர்ந்திடும்.

கொ.பெ.பி.அய்யா.







No comments:

Post a Comment