Wednesday 18 June 2014

என்ன இது காதலா@

என்ன இது காதலா?

என்ன இது காதலா?
அன்பில் காதலா?இல்லை 
ஆசைக் காதலா?

அன்பில் நிறைந்த காதலானால்
அருமை குலையாது--அது
ஆசை வரைந்த காமமானால்
பாசம் பழகாது.

என்ன இது காதலா?
உண்மைக் காதலா?இல்லை
உறவில் காதலா?

உண்மை மணந்த காதலானால் 
கண்கள் பரவாது--அது 
உறவுக்கான கூடலானால்
கண்கள் பேசாது.

என்ன இது காதலா?
கருணைக் காதலா?இல்லை 
கடமைக் காதலா?

கருணை அருளும் காதலானால்
கைகள் தயங்காது--அது
கடமை வருடிய பரிவேயானால்
காமம் மயங்காது.

என்ன இது காதலா?
கனவுக் காதலா?இல்லை
காமக் காதலா?

கனவில் பூத்த காதலானால்
கற்பனை முடியாது--அது 
காமம் கூடிய மயக்கமானால்
காலம் விடியாது.

என்ன இது காதலா?
எண்ணக் காதலா?இல்லை
வண்ணக் காதலா?

எண்ணம் கொண்ட காதலானால்
என்றும் மாறாது--அது
வண்ணம் கண்ட நெருக்கமானால்
வறுமை தாங்காது.

என்ன இது காதலா?
என்னில்க் காதலா?இல்லை
என்மேல்க் காதலா?

பழகி என்னில் காதலானால்
விலகி ஓடாது—அது
பருவம் என்மேல் மோகமானால்
பழமை நிலையாது.

என்ன இது காதலா?
அழகில் காதலா?இல்லை
அறிவில் காதலா?

அழகில் நனைந்த காதலானால்
ஆயுள் வளராது—அது
அறிவில் வளர்ந்த பந்தமானால்
அன்பில் குறையாது.

என்ன இது காதலா?
இளமைக் காதலா?இல்லை
இயல்பில் காதலா?

இளமை குளிர்ந்த காதலானால்
முதுமை காயாது—அது
இயல்பில் முதிர்ந்த சொந்தமானால்
இதயம் தேயாது..

என்ன இது காதலா?
உணர்வில் காதலா?இல்லை
உடமைக் காதலா?

உணர்வில் கலந்த காதலானால்
கனவில் கலையாது—அது
உடமை நினைந்த உறவேயானால்
நினைவில் தொடராது.

என்ன இது காதலா?
உடல்மேல்க் காதலா?இல்லை
உள்ளத்தின் காதலா?

உடலால் தீண்டிய காதலானால்
உணர்வில் இணையாது—அது
உள்ளம் தழுவிய உருக்கமானால்
உயிரில் பிரியாது.

கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment