Friday 31 October 2014

என்ன பிரச்சனை


பிரச்சனை என்ன?

எழுந்திடு மகனே! எழுந்திடு மகளே!
விழுந்தது மறந்து எழுந்திடு சுகமே
அழுவது எதற்கு விழுவதும் கணக்கு
எழுவதும் எளிதென பழகிடும் உனக்கு

அழுகவும் சிரிக்கவும் அடையாளம் இருக்கு.
பழகவும் முறிக்கவும் படிப்பதாம் அதற்கு.
விழுகவும் எழுகவும் அனுபவம் பழக்கு
விலகவும் விளங்கவும் அறிவதும் வழக்கு.

பள்ளம் மேடு பயணத்தில் பழகு!
உள்ளம் தேடும் உலகம் அழகு.
வெள்ளம் ஓடும் விசையில் விலகு!
கள்ளம் ஆடும் கபடம் உலகு.

சோதனை பயின்று சாதனை முயல்க!
வேதனை முயன்று போதனை பயில்க!
வாதினை எதிர்த்து வடுவினைக் கலைக!
சூதினை வதைத்து கொடுவினை தொலைக!

பிரச்சனை என்ன பண்ணிடும் உன்னை
சவாலாய் எண்ணி முன்னிடு தன்னை.
பணிந்தால் மனதும் கலங்கிடும் பின்னே!
துணிந்தால் கடலும் சுருங்கிடும் முன்னே

எனக்கொரு சவால்  என சொல்லிப்பார்.
உனக்கது பிரச்சனை ஒடும் பார்.
கனலாய் சவாலை எரிய விட்டால்
மனதுள் நம்பிக்கை ஒளிருது பார்.

வாழ்க்கை மேடையில் வகைபல வேடங்கள்.
வாழும் போதையில் அவையெலாம் மாயங்கள்.
காலம் கற்பித்த அனுபவப் பாடங்கள்
ஆளும் உண்மைகள் அதுதான் வேதங்கள்.

கொ.பெ.பி.அய்யா.



முக நூலில்
சற்று முன் படித்த ஒரு பதிவு…

“எனக்கு ஒரு பிரச்சினை..”என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்...
பிரச்சினை என்று சொன்னாலே கவலையும் , பயமும் கட்டாயம் வரும்....
"எனக்கு ஒரு சவால் “என்று சொல்லிப் பாருங்கள் ...தைரியமும் ,தன்னம்பிக்கையும் தானாகவே வரும்..”

ஆம்..நிஜம்தானே..!

“காவல்காரன்” என்று ஒரு படம்.. எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட பின் எம்.ஜி.ஆர்.நடித்த படம்.... ஷூட்டிங் ஆரம்பமானது...
வசனம் பேசி நடித்தபோது , எம்.ஜி.ஆரின் குரலில் குறை தெரிந்தது..முன்னர் பேசியது போல் தெளிவாகப் பேச முடியவில்லை..

“பொருத்தமான குரல் உடையவர்களைக் கொண்டு டப்பிங் கொடுத்து இந்தப் பிரச்சினையை சரி செய்து விடலாம் ” என்று சிலர் யோசனை சொல்லியிருக்கிறார்கள்...

ஆனால், எம்.ஜி.ஆர். இதை ஏற்க மறுத்து விட்டாராம்...
“இது பிரச்சினை இல்லை..எனக்கு ஏற்பட்டிருக்கும் சவால்...
நானே என் சொந்தக் குரலில் பேசுகிறேன். மக்கள் ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து நடிக்கிறேன். ஒருவேளை என் குரலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் , சினிமாவில் நடிப்பதையே விட்டு விடுகிறேன்” என்று சவால் விட்டுக் கூறி , அதன்படியே, எம்.ஜி.ஆர். சொந்தக் குரலில் பேசினார்...

பலத்த எதிர்பார்ப்போடு வந்தான் காவல்காரன்...
சில இடங்களில் எம்.ஜி.ஆரின் குரல் தெளிவாக இல்லாவிட்டாலும், ரசிகர்கள் அதைப் பெரிய பிரச்சினை ஆக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்...
“காவல்காரன்” ...சூப்பர்ஹிட்..!!.

"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்"

ஆம்...பிரச்சினைகள் என்று நினைப்பவர்கள் ,பின்தங்கி விடுகிறார்கள்...!!!
சவால்களை சந்திப்பவர்களே சரித்திரம் தன்னிலே நிற்கின்றார்கள் ...!!!

சந்திக்கத் தயாராவோம்..சவால்களைளை

No comments:

Post a Comment