Saturday 25 October 2014

அச்சம் தவிர்.அம்மாவை பார்.


அம்மாவைப் பார்!

அச்சம் மட்டும் மிச்சமாடா?
அச்சன் தந்த சொத்தாடா?
துச்சமென தூக்கிப் போட்டா
உச்சம் உந்தன் பக்கமடா!

அச்சம் உன்னை வெல்லுமடா!
அடிமை யாக்கிக் கொல்லுமடா!
அச்சம் விட்டால் சாவுமுன்னை
அணுகத் தன்னை அஞ்சுமடா!

அச்சம் கொடும் பாவமடா!
ஆக்கம் கெடும் சாபமடா!
பச்சம் சுடும் பாலையடா!
எச்சம் படும் நாளையடா!

அஞ்சும் உள்ளம் கள்ளமடா!
அமைதி யில்லா இல்லமடா!
பகல் அறியா இருளடா!
இகல் நிறையும் மருளடா!

அச்சம் சுற்றம் நம்பாதடா!
செத்துச் செத்துச் சாகுமடா!
சுற்றம் விலகி சேராதடா!
சொந்தம் பழகி கூடாதடா!

அச்சம் ஒரு அவதியடா!
அறி யாமைக் கைதியடா!
தன்னை நம்பா ஊனமடா!
பின்னை பேசும் ஈனமடா!

அம்மாவைப் பார் நம்பிக்கை
அச்சம் என்ற எச்சமில்லை.
நெருப்பாற்றில் நீந்தியும்தான்
கரையேறும் போர்க்குணத்தை.


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment