Tuesday 7 October 2014

மனம் உழுத்த மனிதர்கள்

அன்னை உன்னை விடுவோமா?

நாய்கள் சூழ்ந்த கூட்டத்தில்
தாய்தான் வீழ்ந்த நேரத்தில்
சேய்தான் பதறித் துடிக்காதோ!—அய்யோ
வாய்தான் கதறி வடிக்காதோ!

பேய்கள் கூடும் ஆட்டத்தில்.
தாய்தான் பாடும் ராகத்தில்
யாரது காதும் கேட்காது.—பாவம்
சேயது சோகம் பார்க்காது.

மனமும் உளுத்த மனிதர்கள்
இனமும் பழித்த சனிதர்கள்.
தாயையும் மதியாத் தறுதலைகள்—இந்த
சேய்கள் விதியோ கடலலைகள்.

சேயும் எம்மைப் பறிப்பாரோ?
தாயும் உன்னைப் பிரிப்பாரோ?
வாய்தான் அழுதும் வாழ்வோமோ?—தீய
பேய்தான் தொழுதும் தாழ்வோமோ?

எங்கள் சொந்தம் நீயம்மா
எல்லாம் உந்தன் சேயம்மா.
உயிரில் கலந்த தாயம்மா.—எங்கள்
உணர்வில் எழுந்த தீயம்மா.

அன்னை உன்னை விடுவோமா?
மண்ணை வீணே படுவோமா?
தன்னைத் தானே கெடுவோமா?---அம்மா
முன்னைத் தமிழே முடிவோமா?

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment