Friday 17 October 2014

அறவழி அதிமுக கட்டுரை

அறவழி நடப்போம் !அமைதி காப்போம்!

அன்புடையீர் வணக்கம்.

இறைவன் அருளால் அம்மா அவர்கள் நமக்கு மீண்டும் கிடைத்துள்ளார்.அதற்காக அந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நாம்  நமது நன்றி யைக் காணிக்கையாக்குவோமாக.

ஒரு குடும்பத்தின் தலைவிக்கு இன்னல் ஒன்று வரும்போது அந்தக் குடும்பமே நிலை குலைந்து போகிறது.அந்தக் குடும்பம் அவரை நம்பித்தான் வாழ்கிறது என்ற நிலையில் அவருக்கு ஒரு சோதனை நேரும் கட்டத்தில் அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் அந்தத் தலைவியை எவ்வாறேனும் அச்சோதனையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற முயற்சித் துடிப்பில் இறைவனிடம் மன்றாடுவார்கள்.இது மனித உணர்வின் வெளிப்பாடு.அதேபோல்தான் ஒரு இயக்கத்தின் தலைவிக்கு அவருடைய உண்மை விசுவாசிகள் காட்டும் நிலைப்பாடும்.தங்கள் உணர்வுகளை உண்ணா நோன்பாகவும்,எழுச்சிப்பேரணியாகவும்,மனிதச்சங்கிலியாகவும்,இறை வழிபாட்டுப்  பிரார்த்தனைகளாகவும் அறவழியில் வெளிப்படுத்துவதில் யாருக்கு என்ன இடையூறுகள் நேர்ந்துவிடும்.ஒரு ஜனநாயக நாட்டில் இதற்கும் உரிமை மறுக்கப்படுமா? இதற்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்மந்தம்?என்பதுதான் இன்று மனித நேயம்கொண்டவர்களின் மனச்சாட்சி கேட்கும் கேள்விகளாகும்.

எவருக்கு மனச்சாட்சி பேசாதோ அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.அவர்களுக்கு அவ்வாறொன்று நேரும்போது அவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள்.பாடம் கற்றவர்கள்கூட பட்டது மறந்து பேசுவது காழ்ப்புணர்ச்சியின் குறிப்பு என்றும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.அதற்காக அப்படிப்பட்டவர்களை நாம் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.காலம் அவர்களை கணக்கு வைத்துக்கொள்ளும்.

தருமம் நமது தாயை மீட்டுள்ளது.அது போதும்.ஆகவே இந்நிலைக்கு யார் காரணம் என்றும் ஆராய்ச்சி செய்ய வேண்டாம்.அவர்களைப்பற்றி நாம் வீண் விளம்பரம் செய்துகொள்ள வேண்டாம்.துஷ்டரைக்கண்டால் தூர ஒதுங்கு என்ற பொன்மொழிக்கு ஒப்ப நாம் நம்மை நம் நிலையில் நிறுத்திக்கொள்வோம்.நாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் வந்தவர்கள்.அவர் நமக்குக் கற்றுத் தந்த தூய்மை,நேர்மை,வாய்மை,கடமை ஆகிய ஒழுக்க நெறிகள் நம்மிடம் அவர் அடையாளமாக உள்ளது.அந்த அடையாளமே நமது வெற்றியின் சின்னமான இரட்டைஇலை.அதை இருவிரல்களால் ஏற்றிக்காட்டுவோம்.அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்றால் அது தர்மத்தின் கூட்டம்.பிறர்க்கின்னா செய்யா பேராளன் புரட்சித் தலைவரின் பாசத்தின் சொந்தங்கள்.அன்பின் விளக்கமான புரட்சிதலைவி அம்மாவின் பந்தங்கள்.நாமெல்லாம் ஒரு குடும்பம்.நமது குடும்பத்தலைவியின் சொல்லுக்கு அடிபணிவோம்.நாம் நமக்கென்று நமக்காக நம் நாட்டுக்காக நமது அம்மா இடும் கட்டளை எதுவோ அதையே நாம் நமது கடமையாக ஏற்போம்.நாட்டின் சட்டம் ஒழுங்கை நமது ஒழுக்கமாக உள்ளத்தில் கொள்வோம்.

சட்டம் ஒழுங்கிற்கு இலக்கணம் கற்றுத்தரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு என்றால் அது மிகையாகாது.தனிமனித விருப்பு வெறுப்புகளால் எதிர்பாராது நிகழக்கூடிய அசம்பாவிதங்களைக் கூட ஒரு நாட்டின் சட்டம் ஒழுங்கோடு சம்மந்தப் படுத்திப் பேசுவது எந்த விதத்தில் நியாயமாகும் என்பதுதான் எந்த அறிவுக்கும் எட்டவில்லை.இந்த விஞ்ஞான யுகத்தில் ஊடகங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டதால் எத்தனை தொலைதூரமானாலும் எங்கெங்கு என்ன நிகழ்ந்தாலும் எல்லோரும் அறியும்வண்ணம்  செய்திகள் அவ்வப்போது வந்து சேர்ந்துவிடுகின்றன. அதை சில ஊடகங்கள் பூதாகாரமாக்கிவிடுகின்றன .அது மாத்திரம் அல்ல முன்போல் காவல் நிலையங்களுக்கு வரும் புகார்களை பதிவுசெய்து விசாரிக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்வதை ஒழித்து இந்நாளில் அனைத்துப்புகார்களும் பதிவு செய்யப்படுவதால் அவை பத்திரிக்கைகளில் செய்திகளாக வந்து விடுகின்றன என்பதுதான் உண்மை.ஆனாலும் படிப்படியாக ஆண்டுக்கு ஆண்டு குற்றங்கள் குறைந்து வருகின்றன என்பதும் காவல்துறை ஆய்வறிக்கைப்படி உண்மையே.

தாயாளும் தமிழ்நாடு.தர்மத்தின் தாய்வீடு.எதிர்ப்பாரை எதிரி என எண்ண வேண்டாம்.இன்று எதிர்ப்பார்.நாளை நண்பராவர். பொறுமை என்பது அமைதி.பொறுமையும் அமைதியும் பெருமையின் நியதி.சட்டம் அதன் கடமையைச் செய்யட்டும்.ஒழுக்கம் உயர்வினை நல்கட்டும்.

அறவழி நடப்போம் !அமைதி காப்போம்!

நன்றி!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment