Tuesday 16 September 2014

அன்புள்ள மகனுக்கு.


அன்புள்ள மகனுக்கு.

அன்புள்ள மகனுக்கு அம்மா எழுதும் கடிதம்.
அம்மா தரும் ஆயிரத்தால் அன்னையும் சுபமே.
உண்ண மணிஅரிசியும் உடுத்த துணி சேலையும்
உறங்கத் தனிவிடுதியும் ஒருகுறையும் இல்லை மகனே!

நாயொன்று வளர்த்தாயே அது நலமா மகனே!
தாயன்று ருசித்தகஞ்சியை நாயின்று குடிக்குதா மகனே!
பேயென்று பேசிப்பேர் வைத்தபோது மகிழ்ந்தேன் மகனே!
நாயின்று குரைத்துமகிழ என்னபேர் அழைத்தாய் மகனே!

தாய்க்குத் தந்த அன்னத்தட்டு நாய்க்கும் வேண்டாம் மகனே!
வாய்க்கு வந்து எட்டும் போதுபட்டு வெட்டிவிடும் மகனே!
விரலா லோட்டை அடைக்கும் வித்தை நாயுமறியாது மகனே!
மறவா ததனை மகனுக்குத் தெரியாமல் ஒளித்துவை மகனே!

தாய்நான் படுத்த பாயதுபாவம் நாய்க்கும் வேண்டாம் மகனே!
காய்ந்து கிழிந்த கோரைகிழித்து  புண்ணாகும் மகனே!
உதறிவிரிக்கப் பழகாநாயும் கதறியழுதும் கண்ணீர்விடும் மகனே!
சிதறியதனை சிதையில்கொழுத்தி சீக்கிரம் அழித்திடு மகனே!

தாய்தான்குளிரை தாங்கியவலிமை நாய்க்கும் வேண்டாம் மகனே!
வேய்போர்வை போர்த்தியும் மெத்தைமேல் கிடத்து மகனே!
தாய்போல் பொறுமையும் நாயும் கொள்ளாது மகனே!
வாயில்லா ஜீவனதும் வருத்தம் சொல்லப்புரியாது மகனே!

தாய்க்கூற்றிய தொட்டிக்கஞ்சி நாய்க்கும் வேண்டாம் மகனே!
சேய்க்காற்றும் சேவையெல்லாம் நாய்க்காற்று நல்ல மகனே!
நன்றியுள்ள பிராணியது நாளையது எண்ணும் மகனே!
என்றுமுன் தாய்நான் ஏங்குமுந்தன் நலம்தான் மகனே!

எப்படிநீ செய்வாயோ அப்படிநீ கொள்வாய் மகனே!
தப்படிநீ வைக்காதே ஒப்படிநீ முன்வை மகனே!
இப்படிநீ வாழ்வாயே என்றுமென் அன்பு மகனே!
இப்படிக்குன் நலம்விரும்பும் என்றுமுன் அன்புத்தாய் மகனே!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment