Tuesday 8 July 2014

சொன்னதும் நீதானோ!




சொன்னதெல்லாம் என்னாச்சு?

எத்தனை சொல்லடுக்கி எத்தனைதான் உள்ளடக்கி
எத்தனை பண்ணொடுக்கி எத்தனைதான் எண்ணடக்கி
எத்தனை பொருள்கருதி எத்தனைதான் வரியெழுதி
எத்தனைதான் கொடுத்தாலும் அத்தனையும் பயனென்ன?

பாட்டாகப் பாடத்தானே பாடிவைத்தார் பாட்டெல்லாம்.
கேட்டாள வாழத்தானே சூடிவைத்தார் ஏட்டெல்லாம்
பாடாகப் பட்டுத்தானே தேடிவைத்தார் தேட்டெல்லாம்.
தேடாமல் கெட்டுத்தானே வாடிநின்றால் என்னசெய்வார்?

கோடிசேர்க்க ஆசைப்பட்டு ஓடியோடித் தேடியும்
கோபுரமாய்க் கட்டிமாடி குளுகுளுன்னு வாசமும்
மூடித்திறந்த காத்துப்போல மூச்சுப்போனா போச்சுடா.
ஆடித்திரிந்த ஆட்டமெல்லாம் ஆச்சுசாம்பல் தூசடா.

எத்தனைதான் பெட்டிகளோ பொத்திவச்ச பொருள்களோ!
எத்தனைதான் ஆசைகளோ எண்ணிவச்ச கனவுகளோ!
பேராசை ஒன்றினாலே கூடாத செயலாலே!
வேரோடு சாயுமடா வீதிவர நேருமடா.

ஆறடி நிலம்கூட யாருக்குத்தான் சொந்தமடா? 
தூரடி நிழல்வாழ்வும் நேரம்சொல்லிப் போகுமடா.
ஏதுமிங்கே நிலையுமில்லை என்பதுதான் வாழ்க்கையடா
ஏனோஆசை வீணேபாவம் எண்ணுவதே நன்மையடா.

சொன்னதெல்லாம் என்னாச்சோ! சுடுகாட்டுப் பேச்சாச்சோ!
எண்ணுதெல்லாம் பொன்னாச்சோ! இயக்கத்தின் மூச்சாச்சோ!
மண்ணிதெல்லாம் பொன்னானாலும் மடிகூட்டி அள்ளினாலும்
என்னகொண்டு போவாயோ! என்னகொண்டு வந்தாயோ!

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment