Wednesday 29 June 2016

கட்டுரை

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு அதே போன்ற ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தமிழக அம்மா  தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கியுள்ளார்கள். அம்மா என்றும் மக்கள் பக்கம் தான், மக்கள் என்றும் அம்மா பக்கம் தான் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. அம்மா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ளது.
அதற்கு மக்கள் அளித்த அங்கீகாரம் தான் இந்த தேர்தல் வெற்றி. தி.மு.க ஊடகங்கள் வாயிலாகவும், பிரச்சாரங்கள் மூலமும் பல்வேறு பொய்களை கட்டவிழ்த்துவிட்டனர். அவர்களது பொய் குற்றசாட்டுகளை மறுத்து விளக்கங்களை அளித்தாலும், அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், கோயபல்ஸ் பாணியில் தாங்கள் சொன்ன பொய்களை திரும்ப திரும்ப சொல்லி வந்தனர். அம்மா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசை பற்றி கற்பனை குற்றசாட்டுகளை அள்ளி வீசினர். ஆனால், இவ்வாறெல்லாம் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்பதை இந்த வெற்றியின் மூலம் தமிழக மக்கள் நிரூபித்துள்ளார்கள். தமிழக மக்களை, அதிலும் குறிப்பாக ஏழை, எளிய மக்களை காக்கும் இயக்கம் அ.தி.மு.க தான் என்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்த காரணத்தால் தான் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை அம்மாவுக்கு வழங்கியுள்ளார்கள்.
தேர்தல் நடைபெற்ற 232 சட்டமன்ற தொகுதிகளில் 134 இடங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்துள்ளார்கள். அம்மா மீது தளராத நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை வழங்கியதற்காக அம்மாவின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மா ஏற்கெனவே சொல்லியதைப் போல தமிழக மக்கள் பால் அம்மாவுக்குள்ள நன்றியுணர்வை வெளிப்படுத்த அகராதியில் போதிய வார்த்தைகளே இல்லை. தமிழக மக்கள் நலனுக்காக அம்மா புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு தனது நன்றியை செயலில் காண்பிப்பார் என்ற உறுதியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தல் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உழைத்த எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, அம்மாவின் உயிரினும் மேலான அருமை கழக உடன்பிறப்புகளுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், தோழமை கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் அம்மாவின் சாட்சியாக நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

வரலாற்றைத் தீர்மானிப்பது மக்களே ! மக்களை முட்டாள்கள் என்று நினைப்பவர்கள்தான் முட்டாள்கள்! தமிழகத்தில் மக்களின் சமூக உளவியல் மிக வியப்பாக இருக்கிறது. சாதி, மதம், சினிமா ஆகியவை வேறு... அரசியல் வேறு என்று தெளிவாக இருக்கிறார்கள். ஒருவர் ஒரு நடிகரின் தீவிரமான ரசிகராக இருக்கலாம். ஆனால் அதற்காக அந்த நடிகரின் அரசியலை ஏற்றுக்கொள்பவராக இருக்கமாட்டார். திருமணம் போன்ற குடும்ப உறவுகளில் தனது சாதியை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் அதற்காகத் தேர்தல் அரசியலில் தனது சாதியின் பின்னால் சென்றுதான் ஆகவேண்டும் என்று நினைக்கமாட்டார். அதுபோன்றுதான் குறிப்பிட்ட மதத்தில் பற்றுடையவரும். இது வேறு .. அது வேறு என்று தெளிவாக மக்கள் இருக்கிறார்கள். எனவேதான் சாதிகளை அடிப்படையாகக்கொண்ட சில கட்சிகள் தாங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்று கூறுவதை இன்று நாம் பார்க்கலாம். பிரபலமான நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்குப் பயப்படுவதும் அதனால்தான்!. மதத்தை அடிப்படையாகக்கொண்ட கட்சிகள் தாங்கள் அவ்வாறு இல்லை என்று காட்டிக்கொள்ள முயலுவதையும் பார்க்கலாம். இன்றைய தேர்தல் அரசியலில் மதம், சாதி, சினிமா ஆகியவற்றின் சில பாதிப்புகள் காணப்பட்டாலும், அவை பிரதானமான அம்சமாக இல்லை என்பதே உண்மை. ஆராயப்படவேண்டிய ஒரு சமூக உளவியல் அம்சம் இது!

இன்று நம் உயிரினும் மேலான அதிமுக தனிப்பெரும் கட்சியாக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது என மகிழ்வான இந்த நேரத்தில் நம் கழகத்தின் முக்கிய நபர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். ஏன் இந்த தோல்வி என்பதை நாம் சுய பரிசோதனை செய்வது முக்கியமான ஒன்று. மக்கள் நல திட்டங்கள் என அம்மா அவர்கள் செய்த சாதனைகளையும் தேர்தல் அறிவிக்கையையும் கழக நிர்வாகிகளும் வேட்பாளர்களும் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. மேலும் பதவி வந்தவுடன் கர்வத்துடனும் தார்மீக நடவடிக்கையுடனும் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் தொண்டனை மதிக்காததும் தான் முதல் காரணம். மேலும் மாநகராட்சி மேயராக பதவி வகித்த சிலரும் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பலரும்  அம்மா அவர்கள் நல திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியினை பெற்றும் அந்த நல திட்டங்களை விரைந்து செய்யாததும் ஒரு காரணம்தான்.இன்னொன்றும் நான் சொல்லித்தான் ஆகவேண்டும்.உள்ளாட்சி உறுப்பினர்கள்  தங்கள் பகுதி மக்களிடம் நெருக்கமான அணுகுமுறை வைத்துக்கொள்வதற்கு பதிலாக அவர்களின் ஆதரவும் அனுகூலமும் இல்லாமல் நாம் மீண்டும் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இயலாதது என்பதை மறந்தும் தங்கள் கடமையை புறக்கணித்தும் முகம் சுளிக்கும் விதத்திலும் நடந்துகொண்டதும்தான் நகரப்பகுதிகளில் நடுநிலை மக்களின் ஆதரவை இழக்கக் காரணமாக அமைந்துள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை.ஆகவே இன்று மக்களின் எண்ணங்களில் இவ்வாறாக ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்கும்இப்படிப்பட்ட எதிர்வினை உள்ளாட்சி அமைப்புகள் தேவைதானா எனற பொதுவான கருத்தும் நிலவி வருகிறது என்பதும் உண்மை.ஆகவே அரசியலை ஒரு தொழிலாகக் கருதாமல் மக்கள் தொண்டாகக் கொண்டு செயல்பட முனைபவர்களை அடையாளம் கண்டு பொதுவாழ்வுக்கு கொண்டுவர அம்மா ஆலோசிப்பதையும் நான் உணர்கிறேன்.  எனவே இனிமேலாவது வெற்றி பெற்ற நம் கழக உறுப்பினர்கள் பதவி வந்து விட்டதால் மமதை இல்லாமல் உங்கள் பணிவை மக்களிடம் காட்ட தயாராகுங்கள். இரவு பகலாக உங்களுக்காக பாடுபட்ட என்னை போல் தொண்டனுக்கு எதுவும் செய்ய வேண்டாம். அன்புடனாவது பேச பழகுங்கள் அடுத்த தேர்தலில் 234 ம் நமதே.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment