அழகு! அழகு!
அழகு அழகு ஆசை அழகு
ஆசை அதுவும் அருமையானால்.
நியாயம் என்றே எதுவானாலும்
நினைபதெல்லாம் அழகேயாகும்..
அழகு அழகு பொய்யும் அழகு.
பழகும் பொய்யும் நன்மையானால்.
நிகழும் அமைதி நிலைக்குமானால்
நிசமும் பொய்யும் சமமே அழகாகும்.
அழகு அழகு உண்மை அழகு
அதனால் உன்முகம் ஒளிருமென்பதால்.
இயற்கை அதனில் வாழுமென்பதால்
இறையே உண்மை என்பதழகாகும்.
அழகு அழகு கோபம் அழகு.
முளைக்கும் கோபம் நன்மையானால்.
தழைக்கும் அன்பில் ஆர்வமானால்
தீவிரம் கூட அழகாகும்.
அழகு அழகு வேகம் அழகு.
அவசியம் அவசரம் பயனேயானால்.
உயிரொன்று காக்க உதவுமானால்.
உரியநேரம் வேகம் அழகாகும்.
அழகு அழகு தாமதம் அழகு.
ஆழ்ந்த அறிவும் தெளியுமானால்.
பின்விளைவதுவும் முன்னறிவானால்
பேணும் தாமதம் பொன்னறிவழகாகும்.
அழகு அழகு அமைதி அழகு.
அறிவது ஊறும் நேரதுவானால்.
விலகும் வேண்டா தீவினையதனால்
நிலவும் அமைதி நெறிமுறையழகாகும்.
அழகு அழகு சமூகம் அழகு.
பழகும் உறவு பண்புள்ளதானால்.
வரவும் செலவும் வகை சரியானால்.
வாய்க்கும் சமூகம் வாய்மையழகாகும்.
அழகு அழகு அரசியல் அழகு.
அறமென மேவும் அரசியலானால்.
சுயநலம் பொய்யும் சூத்திரமில்லா
பொதுநல அரசியல் வாழ்வியலழகாகும்.
அழகு அழகு நாகரிகம் அழகு.
பழகிய அவரவர் ஒழுக்கமானால்.
அவரவர் நடைமுறை அதுவேயானால்
பழக்கம் நாகரிகப் பண்பழகாகும்.
அழகு அழகு குடும்பம் அழகு.
அமைந்த இடங்கள் ஊரும் நாடானால்
பழகப் பழக உரிமை அதுவானால்
பரவும் குடும்பம் உறவழகாகும். .
அழகு அழகு மொழியும் அழகு.
அவரவர் கூட்டம் ஒலிமுறையானால்.
தகவல் சாதனம் என்பதேயானால்
தாராளம் கற்க மொழியழகாகும்.
அழகு அழகு மதமும் அழகு.
அறிவின் நெறியாய் அதுவாகுமானால்.
சத்தியம் ஒன்றே உத்தமமானால்
சந்நிதானம் மனமே மதமழகாகும்.
அழகு அழகு மனிதம் அழகு.
ஆறறிவுடன் அவனாய் வாழ்ந்தால்.
ஆதியும் அந்தமும் அவனறிவானால்
நீதியில் மனிதம் நிறைவழகாகும்.
அழகு அழகு கவிதை அழகு.
ஆக்கம் சொல்லும் அழகு மொழியால்.
உள்ளம் பதியும் தன்மையதனால்
வெல்லும் கவிதை அழகாகும்.
அழகு அழகு ஆட்சி அழகு
உலக ஆட்சி அறவழி ஆவதால்.
அமைதி வளம் திறம் தொழிலால் உலகின்
ஆட்சி ஒன்றே மேன்மையழகாகும்.
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment